அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது.ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்ததன் மூலம் தற்போது புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. கடைசியாக அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 235 ரன்களை குவித்திருந்தது. சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ள ஹைதராபாத் அணி, தற்போது புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இருக்க முடியாது. ஏனெனில், பிளே-ஆஃப் சுற்றுக்கான போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால், சிறிய தவறு கூட அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் சமநிலைதான். குறிப்பாக கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோரைச் சுற்றியே அந்த அணியின் பேட்டிங் அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் பவர்-பிளே ஓவர்களைச் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு, அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.
முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோரின் வேகம் மற்றும் விக்கெட் வீழ்த்தும் திறன், மிடில் ஓவர்களில் ரஷித் கானின் துல்லியம் மற்றும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பந்துவீச்சு ஆகியவை அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அதிரடியான பேட்டிங் வரிசையைக் கொண்ட அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் திகழ்கிறது. நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டி உள்ளது.
அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிராக 249 ரன்களை விளாசியிருந்தது. அந்த அணியின் முன்வரிசை வீரர்களான அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் தங்களது இடைவிடாத அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிகளுக்குப் பெரும் அழுத்தத்தைத் கொடுத்து வருகின்றனர். இந்த கூட்டணி குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் இஷான் மலிங்கா நடப்பு சீசனில் தொடர்ச்சியாக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு தொடரில் 16 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். பாட் கம்மின்ஸ், ஷிவாங்க் குமார், ஷகிப் ஹுசைன் ஆகியோரும் பலம் சேர்த்து வருகின்றனர்.

More Stories
“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்
“அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” – மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை
இன்ஸ்டாவில் மும்பை அணியை ‘அன்ஃபாலோ’ செய்தாரா ஹர்திக் பாண்டியா? – சலசலப்பும் பின்னணியும்