May 18, 2026

தேசிய தேர்வு முகமையில் 4 அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி என்டிஏ தலைவராகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் இயக்குநராகவும் செயல்படுகின்றனர்.

மேலும் 3 ஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், 2 என்ஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், 2 ஐஐஎம்எஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், ஐஐஎஸ்இஆர் இயக்குநர், ஜேஎன்யூ துணை வேந்தர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக இயக்குநர், நாக் தலைவர், மூத்த உளவியல் டாக்டர் ஆகியோர் என்டிஏவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. என்டிஏ அமைப்பில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வினாத்தாள் கசிவில் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவின் எதிரொலியாக என்டிஏ அமைப்பில் புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி இந்திய வருவாய் துறையின் மூத்த அதிகாரிகள் ருச்சிதா விஜ், ஆகாஷ் ஜெயின், அனுஜா, ஆதித்ய ராஜேந்திர போஜ்காடியா ஆகியோர் என்டிஏ அமைப்பில் புதிதாக இணைந்துள்ளனர். அவர்கள் 5 ஆண்டுகள் என்டிஏ-வில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Spread the love