புதுடெல்லி: பாகிஸ்தான் உளவுப் பிரிவு மற்றும் அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் பலர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தீவிரவாத நடவடிக்கைக்குத் தேவையான அனைத்து பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் இதுபோல் செயல்படும் நபர்கள் சிலரை ஜம்மு காஷ்மீர் போலீஸார் சிலர் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஐஎஸ்ஐ அமைப்பின் பல சதி திட்டங்கள் அம்பலமாகியுள்ன. காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை தேசிய அரசியல் கட்சிகளில் சேர்ந்து உறுப்பினர் அட்டை பெறும்படி பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அறிவுறுத்தியுள்ளது. அப்போதுதான் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனைக்கு உட்படாமல் எளிதில் தப்பிக்கலாம், ஆயுதங்களை எளிதாக கடத்திச் செல்லலாம் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் டிஜிபி எஸ்.பி.வைத் கூறும்போது, ‘‘இதுபோன்ற சதித் திட்டங்கள் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஓரளவு உதவலாம். சோதனையின்போது அரசியல் கட்சிகளின் உறுப்பினர் அட்டைகள் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது.
இதுபோல் தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்தியபோது அரசியல் கட்சி உறுப்பினர் என்ற அடையாள அட்டைகளை காட்டிய சம்பவம் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது’’ என்றார். பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் தீவிர தேடுல் வேட்டையில் காஷ்மீரில் செயல்படும் பல தீவிரவாத அமைப்புகளின் கமாண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் தீவிரவாத நடவடிக்கைக்கு உதவும் நபர்களை அரசியல் கட்சிகளில் இணையும்படி ஐஎஸ்ஐ அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

More Stories
சிலிண்டர் விலை உயர்வு – பொதுமக்களுக்கு முதல் நாளே வந்த அதிர்ச்சி
முப்படைத் தலைமை தளபதியாக தமிழகத்தின் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ல் பதவியேற்பு