புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் எனும் தாய் அமைப்பின் அரசியல் பிரிவாக உருவானது தான் ஜன சங்கம். பிறகு 1977-ல் இது பாஜகவாகி தற்போது, 3-வது முறை மத்திய கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிக்கிறது.
நாட்டில் பெரிய மாநிலமான உ.பி. உட்பட 21 மாநிலங்களிலும் பாஜகவும் அதன் கூட்டணியும் ஆட்சியில் உள்ளன. பழம்பெரும் கட்சி காங்கிரஸின் பல்வேறு சாதனைகளை முறியடித்து தற்போது நாட்டில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது பாஜக. ஆனால், தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பிராந்தியக் கட்சிகள் தான் அதற்கு காரணம். இந்தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.
பல காரணங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அண்ணாமலைக்கு முன்பே குஜராத்தில் கேசுபாய் பட்டேல், சங்கர் சிங் வகேலா, ம.பி.யில் உமா பாரதி, உ.பி.யில் கல்யாண் சிங், ஜார்க்கண்டில் யஷ்வந்த் சின்ஹா, கர்நாடகாவில் எடியூரப்பா போன்றோர் பாஜகவில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கி உள்ளனர். இவர்களில் சின்ஹாவைத் தவிர மற்ற அனைவருமே பாஜக சார்பில் முதல்வராகப் பதவி வகித்தவர்கள்.
கடந்த 1995, 1998 என இருமுறை குஜராத்தின் பாஜக முதல்வராக இருந்தவர் ஜன சங்கின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்தவர் கேசுபாய். இவர் 2012-ல் பாஜகவில் இருந்து வெளியேறி, ‘குஜராத் பரிவர்தன் பார்ட்டி’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதே ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவருக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. பின்னர் உடல்நலம் குன்றியவர், அடுத்த 2 ஆண்டுகளில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கே திரும்பினார். பாஜக மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தவர், கரோனாவால் பாதிக்கப்பட்டு 2020-ல் மறைந்தார்.
குஜராத்தில் சங்கர் சிங் வகேலாவும் பாஜகவில் இருந்து 1996-ல் வெளியேறினார். அதே ஆண்டு ‘ராஷ்டிரிய ஜனதா பார்ட்டி’ தொடங்கி, காங்கிரஸ் ஆதரவுடன் குஜராத் முதல்வரானார். ஓராண்டு மட்டும் பதவியில் இருந்துவிட்டு பின்னர் கட்சியைக் காங்கிரஸுடன் இணைத்துவிட்டார். காங்கிரஸில் இருந்து 2017-ல் வெளியேறி, தனிக்கட்சியில் போட்டியிட்டவரால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. அதன்பிறகு தேசியவாதக் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர், அங்கிருந்தும் வெளியேறி 2022-ல் 3-வது முறையாக புதிய கட்சி தொடங்கினார். அப்போது சங்கர் சிங்கால் எம்எல்ஏவாக கூட முடியவில்லை.
ம.பி. பாஜகவின் தீவிர இந்துத்துவா தலைவராக அறியப்பட்டவர் பெண் துறவி உமா பாரதி. பாஜக.வின் பிரச்சார பீரங்கி என்று பெயர் பெற்றவர். ம.பி.யில் முதல் முறையாக 2003-ல் பாஜக ஆட்சியின் முதல்வரானார். ஹூப்ளி மதக்கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரே ஆண்டில் முதல்வர் பதவியை இழந்தார். கடந்த 2004-ல் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதால், தனிக்கட்சி தொடங்கி சாதிக்க முடியாமல் போனார். மீண்டும் 2011-ல் பாஜகவில் சேர்க்கப்பட்டு உ.பி. அரசியலில் களம் இறக்கப்பட்டார். மத்திய அமைச்சராகவும் இருந்தவர் தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளார்.
உ.பி.யில் தன் பள்ளிப் பருவம் முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர் கல்யாண் சிங். கடந்த 1991-ல் பாஜக முதல்முறை பாஜக ஆட்சி அமைத்த போது முதல்வரானவர். அயோத்தி பாபர் மசூதி இடிக்க முக்கியக் காரணமானார். இதனால் உ.பி. அரசு கலைக்கப்பட்டு பதவி இழந்தவர். கடந்த 1997-ல் மீண்டும் முதல்வரானார். கடந்த 1999-ல் பாஜகவால் பதவி இறக்கப்பட்டவர், புதிய கட்சி தொடங்கினார். மீண்டும் 2004-ல் பாஜகவுக்கு வந்து மக்களவை எம்.பி.யாகி 2009ல் வெளியேறினார். கடந்த 2014-ல் பாஜகவுக்கு திரும்பியவர் ராஜஸ்தான் ஆளுநர் பதவிக் காலம் முடித்து 2021-ல் காலமானார்.
கர்நாடகாவில் இளம் பருவம் முதல் ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. ஜன சங்கிலும் தொடர்ந்தவர் பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த போது 2008-ல் முதல்வராகப் பதவி ஏற்றார். தன்னை அவமானப்படுத்தியதாக கூறி 2012-ல் பாஜகவில் இருந்து வெளியேறி, கர்நாடகா ஜனதா கட்சியைத் தொடங்கினார். 2014-ல் திரும்பியவர் 2018-ல் மீண்டும் பாஜக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தும் மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதன்பிறகு 2019-ல் கர்நாடக முதல்வரானவர் 2021 வரை மட்டுமே நீடிக்க முடிந்தது.
இவர்கள் அனைவருமே தனிக் கட்சி தொடங்கி பின்னர் பாஜகவிலேயே ஐக்கியமானவர்கள். ஆனால், அண்ணாமலையின் வெளியேற்றம் வித்தியாசமானது. இவர் பாஜக ஆதரவுடன் வெளியேறி உள்ளார். அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் அரசியல் கட்சியாகி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் தவெக விஜய்யைப் போல் அடுத்த முதல்வராகி விடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. இதனால், அண்ணாமலைக்கும் இதர மாநிலத் தலைவர்களைப் போல், பாஜகவுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒருவேளை தன் புதிய கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் அவரால் பாஜக தொடர்பைத் துண்டிக்க முடியாது எனத் தெரிகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் இதை மறுத்தாலும் பொதுமக்கள் நம்பியதாகத் தெரியவில்லை. எனவே, அண்ணாமலையும் ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மை இல்லை எனில் அண்ணாமலை பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சிக்க வேண்டி இருக்கும். இதை வரும் நாட்களில் அண்ணாமலை செய்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டி உள்ளது.

More Stories
நார்வே செஸ் 2026 வெற்றி: பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” – தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை
இந்திய பெண் ராணுவ அதிகாரிக்கு ஐ.நா. விருது: பிரதமர் மோடி வாழ்த்து