ஆண்டிபட்டி, மார்ச். 16,
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பங்கேற்ற பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சி.ஆர்.பி.எப். துணை ராணுவப் படையினர் ஆண்டிபட்டிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்குத் தேர்தல் கால பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமின்றித் தங்களது வாக்கினைப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சக்கம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாகக் கொண்டமநாயக்கன்பட்டி வரை சென்றது.
நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி துணை ராணுவப் படையினர் அணிவகுத்துச் செல்ல, அவர்களுடன் ஆயுதப்படை போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சென்றனர். இந்த ஊர்வலமானது பஸ் நிலையம், தேனி சாலை, மதுரை சாலை மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியாகச் சென்றது. வீரர்களின் இந்த அணிவகுப்பு பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்டது.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி