November 4, 2026

ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் ரூ.25,000 இழப்பீடு!

புதுடெல்லி: ஆன்லைன் பண மோசடிகளில் பாதிக்கப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.25,000 இழப்பீடு வழங்கும் புதிய விதிமுறை 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய திட்டத்தின்படி, ரூ.50,000-க்குள் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு, மீட்கப்படாத தொகையில் 85 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சலுகையை ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஏடிஎம், நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் பிஓஎஸ் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளிக்க வேண்டும். மேலும், 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணிலோ, தேசிய சைபர் குற்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்யலாம்.

மோசடிக்கு வாடிக்கையாளரே காரணம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் முதல்கட்டமாக ஓராண்டு செயல்படும் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love