July 7, 2026

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கினார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இன்று இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடி, வரும் 8-ம் தேதி அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து செல்கிறார்.

தனது மூன்று நாடுகள் பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில் ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேஷியாவுக்குப் பயணம் செய்ய உள்ளேன். இந்தியாவும் இந்தோனேஷியாவும் வலுவான நாகரிக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எனது இந்த பயணம் நமது பன்முகக் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் வலுப்படுத்தும். இந்தப் பயணத்தின்போது, இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நான் கலந்துரையாடுவேன். மேலும், நமது நெருங்கிய கலாச்சார உறவுகளுக்குச் சான்றாக இருக்கும் யோக்யகர்தாதவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தை அதிபர் பிரபோவோவுடன் இணைந்து பார்வையிடுவேன்.

இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்கிறேன். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் அழைப்பின் பேரில் நான் மெல்போனுக்குச் செல்கிறேன். எனது இந்த பயணம் இரு நாடுகளக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமர் அல்பனீஸ் உடனான பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வேன். இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுவேன். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விளையாட்டு, விளையாட்டு அறிவியல் ஆகிய துறைகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதற்கு இந்த பயணம் வாய்ப்பளிக்கும்.

மெல்போர்னில் இருந்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில் நான் ஆக்லாந்து செல்கிறேன். எனது இந்த பயணத்தின்போது, பொருளாதாரம், வர்த்தகம், வணிகம் சார்ந்த உறவுகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து பிரதமர் லக்சனுடன் கலந்துரையாடுவேன். சுதந்திர வர்த்தக ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டதன் மூலம், இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் நியூசிலாந்தும் உறுதிபூண்டுள்ளன. இந்தபயணத்தின்போது அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனான் பெருந்திறள் கூட்டத்தில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கிழக்கு மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் அமைந்துள்ள இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு நான் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, மகாசாகர் தொலைநோக்குப் பார்வை, சுதந்திரமான இந்தோ – பசுபிக் பிராந்தியம் குறித்த நமது அணுகுமுறை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

Spread the love