வாஷிங்டன்: ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும் தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன.
இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஐனநாயக கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 215 எம்பிக்களும், எதிராக 208 எம்பிக்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
இந்த தீர்மானத்தின் மீது செனட் அவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்பிக்கள் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு 45 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த சில எம்பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய முடியும். இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, “லெபனான் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.
போர் நிறுத்தம்
லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கண்டிப்பு காரணமாக இஸ்ரேல், லெபனான் இடையே கடந்த சில நாட்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது போர் நிறுத்தத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

More Stories
யுரேனியத்தை பெற ஒப்பந்தம் தேவையில்லை.. இப்போதே எடுக்க முடியும்.. ட்ரம்ப் எச்சரிக்கை!
ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு.. முடிவடையும் ஈரான் போர்? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!
ஈரான் போரால் அபுதாபியில் வாடகை உயர்த்த தடை