புதுடெல்லி: நாட்டின் இறக்குமதி அளவை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு சுமார் 100 தயாரிப்புகளைக் கண்டறிய, துறை சார்ந்த 6 குழுக்களை மத்திய அசு அமைத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த 6 செயல்பாட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உள்நாட்டில் தயாரிக்க வேண்டிய பொருட்களின் பட்டியல் குறித்து விவாதிக்கும். இந்த பட்டியல் 3 வாரங்களுக்குள் மத்திய அமைச்சரவை செயலகத்திடம் வழங்கப்படும்.
மருந்துகள், பயோ டெக் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள், ஜவுளி மற்றும் காலணிகள், மூலதனப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மேம்பட்ட மூலதனப் பொருட்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் உள் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் தயாரிக்க வேண்டிய பொருட்கள் குறித்து இந்த குழுக்கள் ஆராயும்.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் வர்த்தகம், நிதி ஆயோக், மருந்துகள், பொருளாதார விவகாரங்கள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ரசாயனங்கள், ஜவுளி, கனரக தொழில், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், சாலைப் போக்கு வரத்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
இந்தக் குழுக்களுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் தலைமை தாங்குவார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத அல்லது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படாத தயாரிப்புகளை இந்தக் குழுக்கள் கண்டறியும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகள் இரண்டுக்குமான உற்பத்தியை விரிவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம்; தமிழகத்துக்கு 3-வது இடம்