June 15, 2026

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் தவெக: வலையில் சிக்கும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்

உள்​ளாட்​சித் தேர்​தலில் தனிப் பெரும்​பான்மை பலத்​துடன் மகுடம் சூட தவெக அதிரடி வியூ​கம் வகுத்து வரு​கிறது. அதற்​கேற்ப, மற்ற கட்​சிகளில் செல்​வாக்​குடன் இருக்​கும் இரண்​டாம் மற்​றும் மூன்றாம் கட்​டத் தலை​வர்​களைத் தன் பக்​கம் இழுக்க ‘வலை’ வீசி வரு​கிறது. பெரும்​பாலும் இந்த வலை​யில் அதி​முக​வினர்​தான் சிக்கி வரு​கின்​றனர்.

தவெக ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் தமிழக அரசி​யலில் அடுத்தடுத்து அதிரடி மாற்​றங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. ஆளும் தரப்​பின் அசுர வளர்ச்​சி​யைக் கண்டு அதி​முக, திமுக உள்ளிட்டஎதிர்க்கட்​சிகளி​லிருந்து முன்​னாள் அமைச்​சர்​கள், முன்னாள் எம்​எல்​ஏக்​கள்மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் என முக்​கியப் புள்​ளி​கள் தங்​கள் ஆதர​வாளர்​களு​டன் தவெக நோக்​கிப் படையெடுத்து வரு​கின்​றனர்.

அந்​தவகை​யில், ஏற்​கெனவே, அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் வெல்​லமண்டி நடராஜன், கடம்​பூர் ராஜு, எம்​.சி.சம்​பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்​.ஆர். சிவபதி உள்​ளிடோர் தவெக​வில் இணைந்​தனர். நேற்​றும், அதி​முக முன்​னாள் அமைச்​சர் பச்சைமால், வடசென்னை தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் பாலகங்கா, முன்​னாள் எம்​.பி. வனரோஜா, முன்​னாள் நெல்லை மேயர் புவனேஸ்​வரி, முன்​னாள் எம்​.எல்​.ஏ. விஜயதரணி உள்​ளிட்ட நூற்​றுக்​கணக்​கானோர் தவெக​வில் இணைந்​தனர்.

இந்​தத் திடீர் அணித் தாவல்​கள், தமிழகத்​தின் பாரம்​பரியக் கட்​சிகளின் அடித்​தளத்​தையே அசைத்​துப் பார்த்​துள்​ளன. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி ஆதர​வுடன் ஆட்​சி​யைப் பிடித்​தா​லும், அடுத்​த​தாக நடை​பெறவுள்ள உள்​ளாட்​சித் தேர்​தலில் ‘தனிப் பெரும்பான்​மை’ பலத்​துடன் வெற்​றிக்​கொடியை நாட்ட வேண்​டும் என்​ப​தில் தவெக தலைமை உறு​தி​யாக உள்​ளது.

இதற்​காக இப்​போதே தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்ள தவெக, மற்ற கட்​சிகளில் செல்​வாக்​குடன் இருக்​கும் இரண்​டாம் மற்​றும் மூன்​றாம் கட்​டத் தலை​வர்​களைத் தன் பக்​கம் இழுக்க ‘வலை’ வீசி வரு​கிறது. பெரும்​பாலும் இந்த வலை​யில் அதி​முக​வினர்​தான் சிக்கி வரு​கின்​றனர்.

சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் மற்ற கட்​சிகளின் அதிருப்தி நிர்​வாகி​களைக் குறி​வைத்து ‘ரகசிய ஆபரேஷன்’ தீவிரமடைந்​துள்​ளது. அடிமட்​டத் தொண்​டர்​களு​டன் நேரடித் தொடர்​பில் உள்ள உள்​ளூர் செல்வாக்கு மிக்க நபர்​களை வளைப்​ப​தன் மூலம், தேர்​தலை மிக எளி​தாக எதிர்கொள்ள முடி​யும் என தவெக வியூ​கம் வகுத்​துள்​ளது.

அந்​தவகை​யில், பல முன்​னணித்தலை​வர்​களு​டன் ரகசி​யப் பேச்​சு வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. பனையூரில் இதுதொடர்​பான நடவடிக்கைகளில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் சுறுசுறுப்​பாக ஈடு​பட்​டுள்​ளார்.

நகரப் பகு​தி​களைத் தவிர்த்​து, கிராமப்புறங்​களில் முற்​றி​லும் மாறு​பட்ட ஒரு உத்தியைத் தவெக கையில் எடுத்​துள்​ளது. அங்கு கொள்​கைகளை விட மக்​களின் அன்​றாடத் தேவை​களான குடிநீர், சாலை வசதி, தெரு​விளக்கு மற்​றும் வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டம் போன்​றவற்​றில் நில​வும் குறை​களைச் சுட்​டிக்​காட்​டி, ‘சமூகத் தணிக்​கை’ என்ற பெயரில் களப்​பணி​யைத் தொடங்​கத் திட்டமிட்டுள்​ளது.

இந்த அதிரடி நகர்​வு​கள் மூலம் உள்​ளாட்​சித் தேர்​தலில் பெரும்​பாலான இடங்களைச் சொந்த பலத்​தில் கைப்​பற்​றி, தவெக ஒரு தவிர்க்க முடி​யாத சக்தி என்​பதை மீண்​டும் நிரூபிக்க அக்​கட்​சித்தலைமை மும்​முர​மாகச் செயல்​பட்டு வருவதாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இதுகுறித்து தவெக வட்​டாரத்​தில் விசா​ரித்த போது, “அதி​காரத்​தின் அடித்​தள​மான உள்​ளாட்சி அமைப்​பு​களைக் கைப்​பற்​றி​னால் மட்​டுமே, மாநில அளவி​லான இலக்கை நோக்​கிய பயணத்​தைச் செம்​மை​யாக முன்​னெடுக்க முடி​யும் என்​ப​தில் தவெக உறு​தி​யாக உள்​ளது. குறிப்​பாக, சென்னை மாநக​ராட்​சி​யின் 200 வார்​டு​களி​லும் மக்​கள் செல்​வாக்கு மிக்க, நன்கு அறி​முக​மான நபர்​களை வேட்​பாளர்​களாக நிறுத்த கட்​சித் தலைமை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​காக, பிற கட்​சிகளில் உள்ள முக்​கியப் புள்​ளி​கள் மற்​றும் தேர்​தல் பணி​களில் அனுபவம் வாய்ந்த அதிருப்தி நிர்​வாகி​கள், உள்​ளூர் செல்​வாக்கு மிக்க நபர்​களை தவெக பக்​கம் ஈர்க்​கும் முயற்​சிகள் தீவிரமடைந்​துள்​ளன. கிராமப்​புறங்​களில் ஏற்​கெனவே தேர்​தலில் போட்​டி​யிட்டு நூலிழை​யில் வாய்ப்பை இழந்​தவர்​கள் மற்​றும் கட்​சிகளால் ஓரம் கட்​டப்​பட்ட நிர்​வாகி​களுக்கு வலை​வீசப்​பட்​டுள்​ளது” என்​று தெரி​வித்​தனர்​.

அந்​தவகை​யில்​, தவெக​வுக்​கு இருக்​கும்​ 35 சதவீத ​வாக்​கு வங்​கியை, உள்​ளாட்​சி தேர்​தலில்​ முழு​மை​யாக பயன்​படுத்​தி, பிரதான கட்சிகளை ‘​வாஷ் அவுட்​’செய்​யும்​ முயற்​​சி​யில்​ தவெக மும்​முர​மாக ஈடு​பட்​டு வரு​கிறது.

கட்சியில் 234 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்

தற்போது தவெக, கட்சி ரீதியாக 132 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 132 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கட்சியின் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தொகுதி அடிப்படையில் 234 கட்சி மாவட்டங்களை உருவாக்கி, மொத்தம் 234 மாவட்டச்செயலாளர்களை நியமிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

நியமனங்கள் படிப்படியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதிக ஆதரவாளர்களுடன் மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக வந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிவழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல, சில எம்எல்ஏக்களுக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர்களுக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுப் பொறுப்புகளை வழங்கவும் தவெக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதான கட்சியான திமுகவில் 78 மாவட்டங்களும், அதிமுகவில் 82 மாவட்டங்களும் உள்ளன. விசிகவில் ஏற்கெனவே 234 மாவட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love