July 22, 2026

எண்ணெய் ஏற்றுமதிக்கு ஆப்பு வைக்க அமெரிக்கா தீவிரம்… ஈரான் கையில் ‘மெயின் சுவிட்ச்’

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஹார்முஸ் வழியே பாதுகாப்பாகக் கடக்க முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அமெரிக்கா தொடர்ந்து 9-வது முறையாக ஈரான் மீது 
வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற  இரண்டு எண்ணெய் கப்பல்கள் பயங்கர வெடிவிபத்துக்குள்ளாகி, நகர முடியாமல் முடங்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த புதிய மோதல்களில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஜலசந்தியில் வெடித்த கப்பல்கள் – ஈரானின் மிரட்டல்

அமெரிக்க ராணுவம் காட்டிய பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்தியதால் தான், ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறியுள்ளது என்று ஈரானின் புரட்சிகர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்குள்ளான கப்பல்களின் பெயர்கள், கொடிகள் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரங்களை ஈரான் வெளியிடவில்லை. இதனை ராய்ட்டர்ஸ் நிறுவனமும் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு தொடரும் வரை இந்த நீர்வழிப் பாதை பாதுகாப்பற்றதாகவே இருக்கும் என்றும், ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட இதன் வழியே பாதுகாப்பாகக் கடக்க முடியாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்க ராணுவம் தண்டனையை பெற தயாராக இருக்குமாறும் மிரட்டியுள்ளது. இதற்கிடையில், ஓமன் கடற்கரைக்கு அருகே ஒரு கப்பல் தீப்பற்றி எரிவதாகப் பிரிட்டிஷ் ராணுவம் திங்கள்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 9-வது அலை தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் சிவிலியன் மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை முடக்கும் நோக்கில், திங்கள்கிழமை அதிகாலை 9-வது தொடர் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மார்ஷஹர் மற்றும் பந்தர் இமாம் கொமேனி உள்ளிட்ட பல ஈரான் நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று இரவும் நாங்கள் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம் என்றும், வெள்ளிக்கிழமை முதல் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் நினைவாக இது செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் விவரம்

ஈரான் ட்ரோன் வெடித்ததில் சனிக்கிழமை ஈராக்கில் ஒரு அமெரிக்க வீரர் பலியானார். அதற்கு முன்பு ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 420-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் தரப்பு சேதம்

அமெரிக்காவின் தற்போதைய வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தென்மேற்கில் திட்டமிடப்பட்டிருந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானத் தளம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச அணுசக்தி முகமை அங்கு கடந்த முறை ஆய்வு செய்தபோது எந்தவொரு அணுப் பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தற்போது ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை மீண்டும் விதித்துள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்குத் தீர்வு காணவும் நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலத்தின் பாதியை எட்டியுள்ள நிலையில் இந்த விசித்திரப் போர் உச்சத்தை எட்டியுள்ளது.

Spread the love