சென்னை: கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஒருவர். அப்போது இவர்களின் கட்சிப் பொறுப்புகளை பழனிசாமி பறித்தார். மீண்டும் அவர்கள் பழனிசாமியுடன் சமாதானம் ஆன பின்னரும், கட்சிப் பதவி வழங்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமித்தார் பழனிசாமி. ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இப்போது 6வது எம்எல்வாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்