துபாய்: 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் (ODI) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டித் தரத்தை உயர்த்தவும், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
புதிய முறையின்படி, உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கும். முதற்கட்டமாக தரவரிசையில் கடைசி மூன்று அணிகள் ‘சூப்பர் சீரிஸ்’ சுற்றில் விளையாடும். இதில் முதலிடம் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதும். இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுடன், சிறந்த நான்காவது அணியும் ‘சூப்பர் 7’ சுற்றுக்கு தகுதி பெறும். அங்கு நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
புதிய வடிவத்தில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் தொடரின் ஒவ்வொரு கட்டத்திலும் கடும் போட்டி நிலவும் என்றும், ரசிகர்களுக்கு அதிக விறுவிறுப்பான அனுபவம் கிடைக்கும் என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ஒரே தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மோதும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.

More Stories
நியூஸி. அணிக்கு 400-வது வெற்றி
விம்பிள்டனில் ஜன்னிக் சின்னர் சாம்பியன்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்