October 24, 2026

ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரியில் தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலை​வர் வினீத் குப்தா தலை​மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்​சேரி ஆகிய 4 மாநிலங்​களின் நீர்ப்​பாசனத்​துறை அதி​காரி​கள் பங்கேற்றனர்.

அப்​போது கடந்த ஒரு மாதத்​தில் காவிரி நீர்ப்​பி​டிப்பு பகுதி​களில் பெய்த மழைப்​பொழி​வின் அளவு, அணைகளின் நீர் இருப்பு, உச்​ச நீதி​மன்​றத்​தின் இறுதி உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்ள திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து விவாதிக்​கப்​பட்​டது. அப்​போது தமிழக அரசின் தரப்​பில், கடந்த இரு மாதங்​களாக நிலுவை​யில் உள்ள 13 டிஎம்சி நீரை திறக்​கவும், உச்​சநீதி​மன்ற உத்​தர​வின்​படி அக்​டோபரில் திறக்க வேண்​டிய நீரை​யும் சேர்த்து திறக்க வேண்டும் என வலியுறுத்​தப்​பட்​டது.

இதனை ஏற்ற காவிரி நீர் ஒழுங்​காற்று குழு​வின் தலை​வர் வினீத் குப்தா, ‘‘அடுத்த 15 நாட்​களுக்கு கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விட வேண்​டும்” என பரிந்​துரை செய்​தார். இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 60வது கூட்​டம் நேற்று மாலை டெல்​லி​யில் அதன் தலை​வர் எஸ்.கே.ஹல்​தர் தலை​மையில் நடை​பெற்​றது.

அப்போது “தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடகா காவி​ரி​யில் திறந்​து​விட வேண்டும். அக். 24ம் தேதி முதல் பிலிகுண்​டுலு சோதனை நிலையத்​தில் உறுதிப்​படுத்த வேண்​டும்’’ என உத்​தர​விட்​டார். காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் அடுத்த கூட்​டம் நவ.6-ம் தேதி நடை​பெறும்.

Spread the love