சென்னை: கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் வினோத் ஜேக்கப் சாம் தெரிவித்தார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் சென்னையில் உள்ள பாரத மிகுமின் நிறுவன (பெல்) அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் வினோத் ஜேக்கப் சாம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசியதாவது: கடந்த 2025-2026-ம் நிதி ஆண்டில் பெல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டியது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடு்போது 18 சதவீதம் அதிகம் ஆகும். புதிய ஆர்டர் வரவு ரூ.75 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது நிலுவையில் இருக்கும் மொத்த ஆர்டர்களின் மதிப்பு ரூ.2.4 லட்சம் கோடியாக உள்ளது.
இதில் ஏறத்தாழ ரூ.59 ஆயிரம் கோடி மின் பிரிவில் இருந்தும், ரூ.16 ஆயிரம் கோடி தொழில் பிரிவிலிருந்தும் பெறப்பட்ட ஆர்டர்கள் ஆகும். மேலும், கடந்த நிதி ஆண்டில் சுமார் 8.9 ஜிகாவாட் மின் உற்பத்தித்திறன் நிறுவப்பட்டு மின் இணைப்புடன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜார்சு குடா நிலக்கரி வாயுவாக்க திட்டம் பெல் நிறுவனத்தின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் முதல் வணிக ரீதியிலான திட்டமாகும்.
வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான செமி-ஸ்பீடு டிராக்சன் கன்வெர்ட்டர்கள் மற்றும் டிராக்சன் மின்மாற்றிகளையும் பெல் நிறுவனம் வழங்கத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம் மேம்பட்ட போக்குவரத்து தொழில்நுட்பங்களில் நம் நாட்டின் தற்சார்பை வலுப்படுத்துவதில் பெல் நிறுவனம் தனது பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளது.
பெல் நிறுவனத்தை மேலும் போட்டித்திறன் மிக்கதாகவும் இந்தியாவை மேலும் தற்சார்பு கொண்ட நாடாகவும் உருவாக்க அனைத்து ஊழியர்களும் பாடுபட வேண்டும். வலிமையான மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதிலும் தொடர்ந்து பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்