புதுடெல்லி: “இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது முக்கியம்,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த மவுனம் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று (வெள்ளிக்கிழமை) கேள்வி எழுப்பி இருந்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மோகன் பாகவத் ஜி, ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள்… கடந்த ஒரு மாதமாக நீங்கள் கடைப்பிடிக்கும் மவுனம், உங்கள் உபதேசங்களை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விஸ்வ மாங்கல்ய சபா நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், “நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது அது கீழ்படிதலின் காலமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.
புதிய தலைமுறையினர் கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கான காரணங்களை நாம் அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அன்பை வழங்க வேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். குடும்பங்களுக்குள் உரையாடலுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் தவறான பாதையில் செல்பவர்களோ அல்லது திசைதெரியாதவர்களோ அல்ல. அவர்களை புரிந்துகொள்ள கலந்துரையாடல் தேவை. புதிய தலைமுறையினருக்கு நாம் ஒரு சொந்தம் என்ற உணர்வை அளிக்க வேண்டும். நாம் உரையாட வேண்டும். உத்தரவிடக்கூடாது. கட்டளைகள் அல்ல. ஒருமித்த கருத்தே தேவை.” என தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்தோ அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குறித்தோ ஆர்எஸ்எஸ் தலைவர் நேரடியாக எதையும் கூறவில்லை. அதேநேரத்தில், அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்த நேரம் எதைக் குறிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More Stories
ஜூலை 20 போராட்டத்தில் 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்: டெல்லி காவல்துறை தகவல்
ஆகஸ்ட் 1 முதல் திருமலை கோயில் குளத்தில் நீராடத் தடை
நீட் விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் -மாணிக்கம் தாகூர்..