சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு, அரசு சாரா மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள் படிக்கின்றனர்.
அவர்கள் படித்து முடித்தபின், இரண்டு ஆண்டுகள் கட்டாயம், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். அப்படி பணி செய்யவில்லை என்றால், ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பிணைத்தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில், அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தை முற்றுகையிட்டனர்.
மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி கோஷமிட்டனர். இதுதொடர்பாக, மருத்துவர்கள் கூறுகையில், “அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள் அரசு மருத்துவ கல்லுாரிகளில் படித்தால், அவர்கள் கட்டாயம் அரசு பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
ஆனால், எங்களுடன் படித்த பலரை, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து விட்டனர். அதேபோல், போதியளவு இடங்கள் இல்லை என எங்களது ஜூனியர் மருத்துவர்களையும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து விட்டனர்.
ஆனால், எங்களை மட்டும் ஏன் ஒப்பந்தத்தில் வைத்திருக்கின்றனர் என தெரியவில்லை. அதிகாரிகள் ஒருவாரத்தில் தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர். தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

More Stories
காலை 11 மணி நிலவரம்: மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குப் பதிவு
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி