October 16, 2026

“கவர்ச்சி அரசியல் செய்யும் நீர்க்குமிழி அல்ல; அதிமுக மாபெரும் மக்கள் பேரியக்கம்” – பழனிசாமி பெருமிதம்

சென்னை: “கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட அதிமுக, காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்” என்று அதிமுகவின் 55-வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், தர்மம் வெல்லும்! தீய சக்திகள் வீழும்! சோதனைகள் மறையும்! சாதனைகள் தொடரும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

அதிமுக ஆண்டு விழாவை ஒட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற பிறகு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய காலகட்டத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா.

மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்து, சமூக நீதியை நிலைநாட்டி, சாமானிய மக்களின் நலனைக் காக்கும் நல்லரசை நிறுவிய அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அவர் உருவாக்கிய இயக்கத்தைக் கபளீகரம் செய்து, அண்ணாவின் இதயக்கனியாகத் திகழ்ந்த எம்ஜிஆரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது தீய சக்தி.

அந்தத் தீய சக்தியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும்; அண்ணாவின் லட்சியங்களை நிலைநாட்டவும்; கோடானு கோடி மக்களின் பேராதரவோடு, 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் நாள் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கினார் எம்ஜிஆர்.

1977-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக, எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுகவை கட்டிக் காத்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் என எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, ’அமைதி! வளம்! வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்தின்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவை சூழ்ந்த சோதனைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில், உங்களின் பேராதரவோடும், தமிழக மக்களின் நம்பிக்கையோடும், முதல்வராகப் பதவியேற்று, அதிமுகவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தப் பதவியை, மக்கள் பணியாற்றக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகக் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற ஏழை, எளிய மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை வழங்கினோம். அதன் பயனாக இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவர்களாக உருவாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்!

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். மக்களின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தினோம். நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடிமராமத்துப் பணிகளை முன்னெடுத்தோம்.

மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை விரிவாக்கப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாம் தொடங்கிய பல்வேறு திட்டங்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது பெயரை ஒட்டிக்கொண்டு உரிமை கொண்டாடும் அளவிற்கு, அதிமுக ஆட்சியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்!

இத்தகைய பெருமைமிக்க சாதனைகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலான தியாக வரலாற்றையும் கொண்ட நம் கட்சியை, எத்தனையோ எதிரிகளும் துரோகிகளும் அழித்துவிடத் துடித்தபோதும், என் உயிரினும் மேலான எனதருமை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அசைக்க முடியாத பேராதரவோடு, அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்து, கம்பீரமாக வீருநடை போடச் செய்திருக்கிறோம்!

அதற்குச் சான்றாகத்தான், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அசாதாரணமான அரசியல் சூழலிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கிய நிலையிலும், அவற்றையெல்லாம் கடந்து, அதிமுக கூட்டணி சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றதுடன், அதிமுக 47 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது!

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட அதிமுக, காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்!

கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என, சாதாரண மக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதல்வரோ, வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதத்திலும் வினோதம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது! ஏழை, எளிய மக்களும், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே திண்டாடுகிறார்கள்! தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுக்கப்படுகின்றன!

ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது!

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அனைத்திந்திய அதிமுகவை எவ்வாறு பலவீனப்படுத்தலாம்; அதன் சட்டமன்ற உறுப்பினர்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்! அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!

அதிமுக அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல! அது லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்!

நம் தொண்டர்கள் எம்ஜிஆர் பாசறையில் பயின்றவர்கள்! ஜெயலலிதாவின் அரசியல் போர்க்களத்தில் புடம் போடப்பட்டவர்கள்! எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாதவர்கள்! எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாதவர்கள்!

அத்தகைய லட்சிய உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக, உங்களின் பேரன்பையும் பெருநம்பிக்கையையும் பெற்றுத்தான், இன்று இந்த மாபெரும் மக்கள் பேரியக்கத்தின் `பொதுச் செயலாளர்’ எனும் பெரும் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறேன்!

எனக்கு கட்சி வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கட்சியே எனது உயிர்மூச்சு! அதிமுக தொண்டர்களே எனது உயிர்நாடி!

எம்ஜிஆரின் தியாகத்தால் உருவாகி, ஜெயலலிதாவின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அஇஅதிமுக, 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் ஜெயலலிதா முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்டோம்!

இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!

எம்ஜிஆர் காட்டிய பாதையில்! ஜெயலலிதா வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!

தர்மம் வெல்லும்! தீய சக்திகள் வீழும்! சோதனைகள் மறையும்! சாதனைகள் தொடரும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love