சக்தி: சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பாய்லர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: அனைத்து எம்.பி.க்களிடமும் கடைசி நேர ஆதரவு கோரிய பிரதமர்
“தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைத்துவிடும்” – சசி தரூர்
“மகளிர் இடஒதுக்கீடு… அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு