புதுடெல்லி: உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாட்டைப் போக்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சர்க்கரை ஏற்றுமதியானது ‘கட்டுப்படுத்தப்பட்ட’ பிரிவின் கீழ் இருந்தது. இதன் காரணமாக, ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசிடம் உரிய உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் மே 13ம் தேதியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கச்சா சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2026 செப்டம்பர் 30ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட அளவு சர்க்கரை ஏற்றுமதிக்கு (CXL மற்றும் TRQ ஒதுக்கீடு) இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே அனுமதி பெற்ற திட்டங்கள் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் அடிப்படையிலான ஏற்றுமதிக்கும் இந்தத் தடை பொருந்தாது. இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி
செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4.8 மடங்கு அதிகரிப்பு: ஆகஸ்டில் 98 பேர், செப்டம்பரில் 469 பேர் பாதிப்பு