August 11, 2026

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய வீரர்கள்

புதுடெல்லி: வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்​திர தினத்தை கொண்​டாட உள்​ளது. இந்​நிலை​யில், சர்​வ​தேச விண்வெளி நிலை​யத்​தில் தங்​கி​யுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசி​யக் கொடியை ஏந்தி இந்​தி​யர்​களுக்கு சுதந்​திர தின வாழ்த்​துகளைத் தெரி​வித்​துள்​ளனர்.

ரஷ்ய விண்​வெளி வீரர் பியோட்ர் டுப்​ரோவ் தனது சமூக வலைதள பதி​வில், “அன்பு நண்​பர்​களே, வரும் 15-ம் தேதி இந்​தியா தனது 80-வது சுதந்​திர தினத்​தைக் கொண்​டாடு​கிறது. இந்​தி​யர்​களுக்கு அமை​தி​யும் வளமும் கிடைக்க வாழ்த்​துகிறோம். காலனி ஆதிக்கத்​திலிருந்து இந்​தியா விடு​தலை பெற்​று, தன்​னிறைவு மற்றும் வளம் நோக்​கிய பாதை​யில் பயணிக்​கத் தொடங்​கியது” என்று தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்ய விண்​வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெத்​யாயேவ், இந்​திய தேசியக் கொடியை ஏந்​தி​யபடி ‘இந்​தி​யா–ரஷ்யா நட்பு நீடூழி வாழ்க’ என்று வாழ்த்​தி​னார். இந்​தியா அமை​தி, வளம் மற்​றும் விண்​வெளி ஆய்​வில் மேலும் பல சாதனை​களைப் பெற வேண்டும் என்​றும் ரஷ்ய விண்​வெளி வீரர்​கள் வாழ்த்​தினர். இந்த ஆண்​டு, சோவி​யத் விண்​வெளி வீரர் யூரி ககாரின் மனிதகுலத்​தின் முதல் விண்​வெளிப் பயணத்தை மேற்​கொண்​டதன் 65-வது ஆண்டு நிறை​வாகும். இதை​யும் ரஷ்ய விண்​வெளி வீரர்​கள் தங்​களது வாழ்த்​துச் செய்​தி​யில் குறிப்​பிட்​டுள்​ளனர்.

இந்திய–ரஷ்ய விண்​வெளி உறவு

கடந்த 1961 நவம்​பரில் யூரி ககாரின் இந்​தி​யா​வுக்கு மேற்​கொண்ட பயணம், சோவி​யத் யூனியனுக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையி​லான நட்​புறவை மேலும் வலுப்​படுத்​தி​யது. இந்​தி​யா​வைப் பற்​றிய ககாரின் கருத்​துகளை நினை​வு​கூர்ந்த ரஷ்ய விண்​வெளி வீரர்கள், விண்​வெளி​யில் இருந்து பார்க்​கும்​போது இந்​தியா அழகாகத் தெரிந்​த​தாக​வும், பூமி​யில் இருந்து பார்க்​கும்​போது அதை​விட அழகாக இருந்​த​தாக​வும் தெரி​வித்​திருந்​த​தாக கூறினர். மேலும், இந்​தியா ‘உண்​மை​யான நண்​பர்​கள்’ வசிக்​கும் நாடு என்றும் அவர் கூறி​யிருந்​ததைச் சுட்​டிக்​காட்​டினர்.

Spread the love