August 5, 2026

சிவகாசி அச்சகங்களில் 2027 காலண்டர் ஆல்பம் வெளியீடு: 15% வரை விலை உயர்வு

சிவகாசி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் உள்ள அச்சகங் களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2027-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.

மூலப் பொருட்கள் விலை உயர்வால் காலண்டர் விலை 15 சதவீதம் உயர்ந் துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சிவகாசியில் 150-க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டு புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

தீபாவளிக்கு இனிப்பு வழங்கி அன்பை பரிமாறிக் கொள்வது போல், புத்தாண்டுக்கு காலண்டர் வழங்குவது வழக்கமாக உள்ளது.

இதனால் பெரு நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை காலண்டர் அச்சடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

சிவகாசியில் 50-க்கும் அதிகமான அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு, ஆர்டர்கள் பெறப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிவகாசி யில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2027-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.

இதில் ரூ.25 முதல் ரூ.2,500 வரை சிறியது முதல் பெரிய அளவு வரை பல்வேறு வடிவங்களில் தினசரி காலண்டர்கள், மேஜை காலண்டர்கள், மாத காலண்டர்கள் என 350-க்கும் மேற்பட்ட வகை காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் காலண்டர்கள் அச்சிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் புதிய வடிவமைப் புடன்கூடிய காலண்டர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு மென்பட்டுத் துணி காலண்டர், மாத விடுமுறை நாட்களை நாள்காட்டியில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய காலண்டர் 2027-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதேநேரம், மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததன் காரணமாக இந்த ஆண்டு 15 சதவீதம் வரை காலண்டர் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தி யாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகித மாற்றத்தில் 12 சதவீத வரி அடுக்கு நீக்கப்பட்டதில் 12 சதவீதமாக இருந்த பேப்பர் 18 சதவீத வரி அடுக்குக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகரித்தது. இந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக காகிதம், அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காலண்டர் விலை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சியினர் ஆர்டர்கள் பெரிய அளவில் இல்லை, வணிக நிறுவன ஆர்டர்கள் வழக்கம்போல் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Spread the love