
புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள். | படம்: எம்.முத்துகணேஷ் |
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இம்மார்க்கத்தில் இதர மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலைய 5-வது நடைமேடை வழியாகவும்,செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலைய 6-வது நடைமேடை வழியாகவும் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால், தண்டவாளங்களைப் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருமார்க்கத்திலும் மின்சாரரயில்கள் தாமதமாகின்றன. இதன் காரணமாக, ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றனர்.
கடந்த 3 நாட்களாகவே பயணிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று 4-வது நாளாக தாமதத்தால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து நேற்று காலை சென்னைக்கு வந்த பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
இது குறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது: பொத்தேரி நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் இன்று (நேற்று) காலை தாம்பரம் நிலையம் வந்தபிறகு, எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வேறு ரயிலுக்காக கொஞ்சம் நேரம் காத்திருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் வந்தது. அந்த ரயிலில் கட்டுக்கடங்காதகூட்டம் நிரம்பி வழிந்தது. வேலைக்கு உரிய நேரத்தில் செல்லவேண்டும் என்ற நிலையில், அந்த ரயிலில் நெரிசலுடன் பயணித்தோம்.
இந்த ரயில் சேத்துப்பட்டு வந்த பிறகு, 25 நிமிடம் நிறுத்தப்பட்டது. பொத்தேரியில் இருந்து எழும்பூருக்கு வந்தடைய 2 மணி நேரம்வரை ஆகிவிட்டது. மின்சார ரயில்ஆங்காங்கே நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பரங்கிமலை – காட்டாங்குளத்தூர் இடையே கூடுதல் மின்சார ரயில் சேவை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் சிரமத்தை தவிர்க்க, பரங்கிமலை – கூடுவாஞ்சேரி இடையே கூடுதல் மின்சார ரயில் சேவை இயக்க ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சோதனை அடிப்படையில் கூடுதல் ரயில் சேவை இயக்கப்பட்டது.
புறநகரில் இருந்து இந்த ரயிலில் வரும் மக்கள் பரங்கி மலையில் இறங்கி, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலமாக சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியும். இதன்மூலம், காலதாமதத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு