சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானங்களில் போதைப் பொருட்கள் கடத்தி வருவது, தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த 17-ம் தேதி, சென்னை விமான நிலையத்தில், சுங்கத் துறையினரும், மத்திய போதை தடுப்புப் பிரிவினரும் நடத்திய சோதனைகளில், தாய்லாந்து நாட்டிலிருந்து, சிங்கப்பூர் வழியாக வந்த பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ.11 கோடி மதிப்புடைய உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினமும் தாய்லாந்திலிருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், நள்ளிரவில் தாய்லாந்து நாட்டில் இருந்து வரும் விமானங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை ஆகிய இடங்களில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணியாக சென்றுவிட்டு, அங்கிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு திரும்பியது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டபோது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு இடையே ரூ.6கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா 6 கிலோ இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பயணியை கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
Google hit with record EU fine over Shopping service
Why are QAnon believers obsessed with 4 March?
Fisherman swap petrol motors for electric engines