சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.5) பவுனுக்கு ரூ.2,280 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 7,080-க்கு விற்பனையாகிறது.
கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,500-க்கும் மேலாக அதிகரித்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
அந்த வகையில், தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சில நாட்களாக இறங்கி வந்தது. குறிப்பாக, கடந்த 31-ம் தேதி பவுனுக்கு ரூ.2,480 குறைந்திருந்தது.
இதன்பிறகு, தங்கம் விலை சற்று உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று (நவ.4) ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 4,800-க்கு விற்கப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து, ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 14,328 ஆக இருந்தது.
இதுபோல, வெள்ளியும் நேற்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.210 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் அதிகரித்து, ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகவும் இருந்தது.
இன்றைய நிலவரம்:
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.285 உயர்ந்து ரூ.13,385 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080 ஆகவும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.331 உயர்ந்து ரூ.14,602 ஆகவும், பவுன் விலை ரூ.2,488 உயர்ந்து ரூ.1,16,816 ஆகவும் விற்பனை ஆகிறது.
எனினும், இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.210 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,10,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,000-க்கும் மேலாக அதிகரித்தது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று மீண்டு வந்தாலும் கூட, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி பெரும் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பார்வை இப்போது தங்கம் பக்கம் திருப்பியிருக்கிறது. இதுவும், ஆபரணத் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

More Stories
தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு டெல்லி நிறுவனம் ஐபோன் பரிசு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,600க்கு விற்பனை!!
பங்குச்சந்தை வர்த்தகம்: சென்செக்ஸ் 1,225 புள்ளி உயர்வு