August 1, 2026

தமிழக முதல்வர் விஜய் பெங்களூரு வர வேண்டாம்: டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் நன்றாக‌ இருக்காது என்பதால், அவருடனான சந்திப்பை ஒத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

காவிரி நதி நீர் பங்கீடு, மேகேதாட்டு விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து பேச தமிழக முதல்வர் விஜய் நேரம் கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த டி.கே.சிவகுமார், ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திப்பதாக அறிவித்தார்.

இதற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், விஜய் வரும்போது விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரித்தார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் தாமாக முன்வந்து சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதனால் நானும் நட்புறவுடன் சந்திக்க விரும்பினேன்.

இதனிடையே காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு நீர் திறக்குமாறு உத்தரவிட்டன. இதற்கு எதிராக பெங்களூரு, மண்டியா ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய பதற்றமான சூழலில் விஜயை சந்திப்பது சரியாக இருக்காது என கருதுகிறேன். எனவே எங்களுடைய சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே எந்த விதமான கசப்புணர்வும் ஏற்பட விரும்பவில்லை. இரு மாநிலங்களும் பயனடையும் வகையில் தீர்வு அமைய வேண்டும். மழை நல்ல முறையில் பொழிந்தால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும்.

மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அந்த அணைத் திட்டத்தால் கர்நாடகாவை விட த‌மிழகத்திற்கே அதிக நன்மை ஏற்படும். மின்சார‌ உற்பத்தியை தவிர மற்ற விவகாரங்கள் தமிழகத்திற்கே அதிக பயன் அளிப்பதாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி நீர் பங்கீடு குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 2-ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love