April 17, 2026

தமிழகத்தில் வீதி எங்கும் விசில் கோலங்கள்! விஜய்யின் ஒற்றை வேண்டுகோளுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்

விஜய் கோரிக்கையை ஏற்றுத் தமிழகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீட்டு வாசல்களில் விசில் கோலம் இட்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு உற்சாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னெடுத்துள்ள ஒரு புதுமையான பிரச்சார உத்தி, மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனது கட்சியின் தேர்தல் அடையாளத்தை மக்களிடையே ஆழமாகப் பதிய வைக்க, மக்கள் தங்கள் வீடுகளின் வாசலில் ‘விசில்’ சின்னத்தை மையமாக வைத்து கோலமிட வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கை, இப்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

விஜய் Sir கூட இருப்பதே எனக்கு கிடைத்த வரம்! Bussy Anand Exclusive

விஜய் வைத்த நூதன கோரிக்கை

நேற்று தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அப்போது, அவர் தவெக தொண்டர்கள் இடையே புதுவிதமாக கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வீட்டு வாசல்களில் விசில் கோலத்தை போடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தவெக தொண்டர்கள் தங்களது வீட்டு வாசல்களில் விசில் கோலத்தினை இட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

  

மாஸ் காட்டும் மக்கள் இயக்கம்

நேற்று முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் அதிகாலையில் விசில் கோலங்கள் அணிவகுப்பதைக் காண முடிகிறது. சாதாரண கோலங்களுக்கு மத்தியில், கட்சி வண்ணங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப்பொடிகளைப் பயன்படுத்தி, தத்ரூபமாக வரையப்படும் இந்த ‘விசில்’ கோலங்கள் வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்கள் ஆர்வத்துடன் இந்தக் கோலங்களை வரைந்து, அதன் அருகில் “விசில் போடு.. வெற்றி நமதே!” போன்ற வாசகங்களை எழுதித் தங்களின் ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.

பெண்களின் ஆதரவும் அரசியல் தாக்கமும்

அரசியல் கட்சிகள் வழக்கமாகச் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் நிலையில், விஜய்யின் இந்த கோலப் பிரச்சாரம் நேரடியாகப் பெண்களின் மனதைக் கவர்ந்துள்ளது. எங்கள் வீட்டு வாசலிலேயே சின்னத்தை வரைவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது எனத் தவெக பெண் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களான எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் #WhistleKolam மற்றும் #TVK போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.


மாற்றத்திற்கான அறிகுறியா?

விஜய்யின் இந்த வியூகம் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறாமல், அதே சமயம் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தனது கட்சியின் அடையாளத்தைக் கொண்டு சேர்க்கும் புத்திசாலித்தனமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இதனை வெறும் விளம்பர உத்தி என்று விமர்சித்தாலும், மக்களின் இந்தத் தன்னார்வ ஈடுபாடு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது மே 4-ஆம் தேதி தெரிந்துவிடும். எது எப்படியோ, தமிழகத்தின் தெருக்கள் இப்போது ஒரு வண்ணமயமான விசில் திருவிழாவாகக் காட்சியளிப்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.

Spread the love