சென்னை: தூத்துக்குடியில் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசுகையில், “தமிழகத்தின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது. அதன்படி,
1. தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு (Transmission) மேம்பாட்டுத் திட்டம்: மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்படக் கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இதற்காக, அரசு தொலைநோக்குடன் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
2. தூத்துக்குடியில் New Supercritical Thermal Power Station அமைத்தல்: தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து, காற்றாலை, சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றாலும், இந்த ஆற்றல் ஆதாரங்கள் சமச்சீராகக் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து பெறப்படும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்துவைத்து இரவு நேரங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது நிறுவப்பட்டு வருகின்றபோதிலும், தற்போதுள்ள கட்டமைப்பு அனைத்து நேரங்களிலும் உள்ள மின்தேவையைப் பூர்த்திசெய்ய இயலாது. எனவே, மின்தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல்மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்குப் பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்துவரும் மின் சுமையைத் திறம்பட கையாள்வதற்கும், மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் ஆயிரத்து 50 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஐந்து, 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
3. மின் பகிர்மானக் கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள்: சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, 36 புதிய 33 By 11 (33/11) கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு
“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்; விஜய்க்கு அந்த எண்ணமே இல்லை” – வைகோ
பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு