August 15, 2026

“தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி” – பிரதமர் மோடி அறிவிப்பு

புது டெல்லி: “மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தேர்வுகளுக்கான இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும். அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்” என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் என்பது நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. தங்கள் குழந்தைகளைப் பயிற்சி மையங்களுக்கு அனுப்பவில்லை என்றால், அவர்கள் பின்தங்கிவிடுவதாக ஒவ்வொரு பெற்றோரும் உணர்கிறார்கள்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, பயிற்சி வகுப்புகளுக்காக அவர்கள் செலவிடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைச் சேமிக்க உதவ விரும்புகிறோம். நமது இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருந்து, அவர்களின் அரவணைப்பைப் பெற வேண்டும்; அதேவேளையில், குடும்பத்தின் மீது கூடுதல் நிதிச் சுமையைச் சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எனவே, நமது இளைஞர்களுக்குப் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச இணையவழிப் பயிற்சியை வழங்க முடிவு செய்துள்ளோம். நம்மிடம் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு உள்ளது; அதேபோல் திறமையான ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உள்ளனர். இந்த வளங்களை ஒன்றிணைப்பதன் மூலம், நாட்டின் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்குவதோடு, இதற்கென ஒரு முழுமையான கட்டமைப்பையும் உருவாக்குவோம்.

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகை வழிநடத்தும் திறனை நம் நாட்டு இளைஞர்கள் பெறும் வகையில், வரும் ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சியை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதுமட்டுமின்றி, வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாகவும் அவர்களே இருப்பார்கள். எனவே, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நமது இளைஞர்களுடன் இணைத்து நாம் முன்னேற வேண்டும். இளைஞர்களுக்கு நாம் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Spread the love