சென்னை: தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
நாகர்கோவில் சிறைக்குள் சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி அடித்து கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் தூத்துக்குடியில் அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் “எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? Accountability, Apology முதல்வருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர், காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அதிர்வலைகள் அடங்காத நிலையில், தூத்துக்குடி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப்போக்கிலும், நடைமுறையிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான், “சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்து கொல்லப்பட்ட சுவடுமறைவதற்குள் அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டிருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அரிதான வழக்குகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
எந்த குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலமே பெற்றுதர வேண்டும். காவல்துறை எதேச்சதிகாரப் போக்கோடு குற்றம் சாட்டப்பட்டவரின் மீது தாக்குதல் நடத்துவதை ஒருநாளும் ஏற்க முடியாது.
காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட அருணாச்சலம் மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
“விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தனி அதிகாரமா?” – பெ.சண்முகம் காட்டம்
அமைச்சர்கள் மோதலால் அதிகாரிகள் அப்செட்”
தண்டரை – ஒரகடம் சாலைப்பணி நிறைவு