சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே டிஜிட்டல் பரிமாற்றம், ஏஐ பயன்பாடு, திறன்மேம்பாடு ஆகியவற்றை படுத்தும் வகையில், சென்னை ஐஐடி-யுடன் தமிழக அரசின் வழிகாட்டல் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையே டிஜிட்டல் பரிமாற்றம், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, திறன்மேம்பாடு ஆகியவற்றை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை ஐஐடியுடன், தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வழிகாட்டல் முகமை இணைந்து செயல்பட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசின் வழிகாட்டல் மையம் – ஐஐடி தொழில்நுட்ப உயர் சிறப்பு மையம் இடையே கையெழுத்தானது.
வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) உதவியுடன் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப தீர்வுகள் குறைந்த செலவில் உருவாக்கப்படும்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் டிஜிட்டல் தீர்வுகளையும், தொழில்நுட்ப பரிமாற்றத்தையும், செயல்பாடுகளையும் எளிதாக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், அரசு கல்வி நிறுவனங்கள் தொழில் துறையுடன் இணைந்த கூட்டு கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, ஐஐடி பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி கூறும் போது, “வாகன உற்பத்தி, பொறியியல் கட்டமைப்பு தயா ரிப்பு உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களின் திறனை அதிகரிப்பதும், தயாரிப்புகளின் தரத்தை உயர்த்துவதும், அவற்றின் சர்வதேச போட்டித் தன்மையை வலுப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின்தலையாய நோக்கம். இந்தகூட்டுமுயற்சி, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் தீர்வுகள் வடிவமைக்க உதவும்.
அதோடு, தமிழக தொழில்துறை சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த செலவிலான மற்றும் உள் நாட்டு டிஜிட்டல் தீர்வுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வசதியாக தொடர் பயிற்சிகள் நேரடி டிஜிட்டல் செயல்முறை பயிற்சி வழங்கவும் வகை செய்யும். இதன்மூலம், தொழில்முனைவோர், மேற்பார்வையாளர், தொழிற்சாலை பணியாளர்களின் டிஜிட்டல் திறன் மேம்படும்” என்றார்.

More Stories
‘மே 10-க்குப் பிறகு தான் மேகேதாட்டு பிரச்சினை உருவானதா?’ – திமுக தலைவருக்கு தவெக கேள்வி
ரூ.2.79 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி கடிதத்தால் மூதாட்டி அதிர்ச்சி
சபரிமலைக்கு மில்மா நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் முறைகேடு: பால்வள மேம்பாட்டு துறை அறிக்கை