புதுடெல்லி: இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பவர் எனும் சாதனையை நிகழ்த்தியதற்காக நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறியடித்துள்ளார். பொதுத்தேர்தலுக்குப் பின் 1952 மே 13-ம் தேதி பதவியேற்று மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. 2014 மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இன்றுடன் தொடர்ச்சியாக 4,399 நாட்களாக பிரதமர் பதவியில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சாதனையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பணியாற்றும் தனித்துவமான பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய மக்கள் உங்கள் தலைமை மீது வைத்துளள நீடித்த நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் ஒரு சான்றாக இந்த தருணம் விளங்குகிறது.
ஆட்சி நிர்வாகம், பொருளாதார மீட்சி, சமூக மாற்றம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உங்கள் பதவிக்காலம் சிறந்து விளங்குகிறது. பரந்த அளவிலான நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளன. ஏழைகளின் முன்னேற்றத்துக்கான கொள்கைகளை வலுவாகக் கடைப்பிடிப்பதை இவை பிரதிபலிக்கின்றன. உங்கள் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான பிஎம் – ஜன்மான் திட்டமும், பழங்குடி கிராமங்களை மேம்படுத்தும் Aaba Janjatiya Gram Utkarsh திட்டமும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளன.
உங்கள் எழுச்சியூட்டும் பயணம், இந்தியாவின் வலுவான ஜனநாயக மரபுகளில் நம்பிக்கையையும் உறுதியையும் தொடர்ந்து விதைக்கிறது. நீங்கள் தொடர்ந்து தேசத்துக்கு சேவையாற்றி, தற்சார்பு இந்தியா, ஆற்றல் மிக்க இந்தியா எனும் இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்த நீங்கள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பாரதத்தின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி-க்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்றுச் சாதனை என்பது வெறும் பதவிக்காலத்தின் நீளத்தைக் குறிப்பது மட்டுமல்ல; மாறாக, நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மாற்றத்துக்கான யுகத்தைப் பிரதிபலிப்பதாகும்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், கோடிக்கணக்கான மக்களை அடிமைச் சங்கிலிகளில் இருந்து விடுவித்தார். அதைப் போலவே, நம் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 25 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமை என்னும் கொடிய சங்கிலிகளிலிருந்து விடுவித்து, கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி மனிதகுல வரலாற்றில் தன்னிகரற்ற சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம், சமூக முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அரங்கில் பாரதத்தின் மிக உயரிய நிலை, பாரதத்தின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என அனைத்து துறைகளிலும் பாரதம் பீடுநடை போட்டு வருகிறது.
பாரதத்தின் செழுமையான கலாச்சார விழுமியங்களைப் போற்றுதல், மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்கள், விடுதலை வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்துதல், காலனித்துவ மனப்போக்கிலிருந்து விடுபடுதல் மற்றும் நமது பண்பாட்டு அடையாளங்கள் மீதான பிடிப்பை வலுப்படுத்துதல் என பாரதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனிதமான செங்கோலை நிறுவுதல், சோழர்களின் பெருமைமிக்க பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணம், மேலும் வெளிநாடுகளில் இருந்து அரிய கலைப் பொக்கிஷங்கள் மற்றும் தொல்பொருட்களை மீட்டுக் கொண்டுவருதல் போன்ற அவரது முயற்சிகள், பாரதத்தின் அழியாத பாரம்பரியத்தையும் பண்பாட்டு மரபுகளையும் செழுமைப்படுத்தியுள்ளன.
அது மட்டுமல்லாது, ஐக்கிய நாடுகள் சபையில், தமிழ்ச் சான்றோன் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மானுடம் போற்றும் ஒப்பற்ற வரிகளை மேற்கோள் காட்டியதன் மூலம், ‘வசுதைவ குடும்பகம்’ என்னும் உலகை ஒரு குடும்பமாக எண்ணும் பாரதத்தின் பெருமைகளை உலகறியச் செய்தவர் அவர்.
2047ஆம் ஆண்டிற்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் திகழ்கிறது.
மனிதகுல மேன்மைக்காக உழைக்கும் மகத்தான தலைவர்களை வரலாறு என்றும் மறப்பதில்லை. அவர்கள் வரலாற்றில் யுகபுருஷர்களாக நிலைபெறுகிறார்கள். பாரதத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலக்கட்டத்தில், தனது தொலைநோக்குத் தலைமையாலும், அர்ப்பணிப்பு மிக்க அயராத உழைப்பாலும், நாட்டின் நலனே முதன்மை என்ற தணியாத வேட்கையாலும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி தற்கால பாரதத்தின் ‘யுக புருஷராக’ திகழ்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதத்தின் பிரதமராக மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இவ்வேளையில் , நாட்டிற்கான அவரது தொடர்ந்த சேவைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

More Stories
சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து ஓசூர் நகரை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி – ராகுல் காந்தியுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்