புதுடெல்லி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை நரேந்திர மோடி நேற்று பெற்றார்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் நரேந்திர மோடி அதே ஆண்டு மே 26ம் தேதி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து, 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தலிலும் என்டிஏ வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி பிரதமராக தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் பதவியில் நரேந்திர மோடி தொடர்ந்து 4,399 நாட்களை நேற்று கடந்தார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நேரு பிரதமராக பொறுப்பேற்றார்.
எனினும், நாட்டின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13ம் தேதி பிரதமராக பதவியேற்ற நேரு, மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, உள்நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாது, உலக தலைவர்கள் பலரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் “இந்திய பிரதமர் மோடியின் சாதனை, அவரது பல தசாப்த கால அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவை மற்றும் தலைமைத்துவத்துக்கு ஒரு சக்தி வாய்ந்த சான்று ஆகும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க செனட்டர் ஜான் கோர்னின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மூன்று ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியாவின் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த சாதனை, இந்தியாவின் வளர்ச்சி, செழுமை மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை மேம்படுத்துவதில் அவரது பல ஆண்டுகால அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவைக்கு ஒரு சான்று” என கூறியுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமராக இருக்கும் மோடி அவர்களுக்கு வாழ்த்துகள். சமீபத்தில் நாம் ரோமில் மீண்டும் சந்தித்து பேசியது, நமது நாடுகள் மற்றும் மக்களுக்கு புதிய வாய்ப்புகளையும், எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான உத்திகளை நாம் இணைந்து தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க தனது எக்ஸ் பக்கத்தில், “புதிய சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு எனது அன்பான வாழ்த்துகள்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

More Stories
பெண்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்த ஏற்ற சூழலை அரசு உருவாக்கி வருகிறது: பிரதமர் மோடி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சி-295 விமான சோதனை வெற்றி
மேகாலயா அமைச்சர், அதிகாரிகள் 6 மாதம் வெளிநாடு செல்ல தடை