சென்னை: நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் உதவிப் பொறியாளர் உட்பட 14 பதவிகளுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடத்தப்பட்டு தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை கடந்த ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. தற்போது உதவி கணக்கு அலுவலர், உதவி பொறியாளர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.
அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்படாது. குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More Stories
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு