சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 22 ஆயிரம் இளம் வேட்பாளர்களை களமிறக்க அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் திட்டமிட்டுள்ளது. அண்ணாமலையின் இந்த வியூகம் தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் புதிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ம் தேதி சமூக ஊடக நேரலை மூலம் தனது புதிய அரசியல் இயக்கமான ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை பிரகடனப்படுத்தினார். அப்போது, அனைவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் ஏதுவாக, கோவையில் ‘அப்துல் கலாம்’ பெயரில் நவீன அரசியல் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெறும் நபர்கள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்படுவார்கள் எனவும் அண்ணாமலை அறிவித்தார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ‘வீ த லீடர்ஸ்’, வரும் செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது. இதற்கான பெயர், சின்னம் மற்றும் கொடி வடிவமைப்புப் பணிகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அண்ணாமலையோடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இந்த புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்கம் தொடங்கப்பட்ட 5 நாட்களில் 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள சில சுவாரசியமான புள்ளிவிவரங்கள் தமிழக அரசியலை உற்றுநோக்க வைத்துள்ளன. அதாவது, ‘இந்த இயக்கத்தில் இணைந்துள்ள 17 லட்சம் பேரில் 25.2% பேர் ‘ஜென்-ஸீ’ எனப்படும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஆவர்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண இந்த இயக்கத்தைச் சேர்ந்த 60,370 உறுப்பினர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே, போட்டியிடத் தயாராக உள்ள இந்த 60,370 பேரில், 37.7% பேர் (அதாவது 22,760 பேர்) ‘ஜென்-ஸீ’ இளைஞர்கள்,’ என அண்ணாமலை தெரிவித்துஉள்ளார்.
தவெக தலைவர் விஜய், எவ்வாறு ‘ஜென்-ஸீ’ மற்றும் இளம் வாக்காளர்களைக் குறிவைத்துத் தனது அரசியல் வியூகங்களை அமைத்தாரோ, அதே உத்தியை அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வரும் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், வரும் உள்ளாட்சித் தேர்தலில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் வேட்பாளர்களைக் களமிறக்கத் திட்டமிட்டிருப்பது, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் புதிய சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More Stories
பழநி பஞ்சாமிர்தம் மீண்டும் சட்டவிரோத விற்பனை: ஆன்லைனில் அதிக விலையால் பக்தர்கள் அதிர்ச்சி
நிதி ஆயோக், என்டிஏ கூட்டங்கள் புறக்கணிப்பு: டெல்லி செல்லாத புதுவை முதல்வர் ரங்கசாமி
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என முழங்கியவர்” – பாரதிராஜாவுக்கு திருமாவளவன் புகழஞ்சலி