கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்றைய தினம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக ஆலங்கட்டி மழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தன.
பெங்களூருவை சேர்ந்த இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல் 29 அன்று பெய்த பெருமழை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கான காரணம் என்பது நிலப்பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம், வளிமண்டல நிலையில் காணப்படும் உறுதியற்ற தன்மை ஆகியவையே ஆகும். இதனால் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது.
ஆலங்கட்டி மழை எப்படி பெய்கிறது?
- வழக்கமாக கோடைக் காலத்தில் உச்சமாக கருதப்படும் ஏப்ரல், மே மாத தொடக்கத்தில் நிகழும்.
- கோடைக் காலங்களில் நிலப்பரப்பு வேகமாக வெப்பமடையும். இது ஈரப்பதம் கொண்ட காற்றுடன் சேர்ந்து நிலத்தின் மேற்பரப்பிலேயே நீடிக்கும்.
- பின்னர் வெப்பமான மற்றும் ஈரப்பதம் மிக்க காற்று மேலே எழுந்து மேகங்களாக மாறும்.
- இதிலுள்ள ஈரப்பதம் மிக உயரத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐஸ் கட்டிகளாக மாறும்.
- ஒரு கட்டத்தில் கனமாகி மேகங்களால் தாங்க முடியாத நிலை ஏற்படும். அப்போது மேலிருந்து பெய்வது தான் ”ஆலங்கட்டி மழை”.
இது குறுகிய காலத்தில், அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நிகழும். இதைத் தான் பெங்களூரு மக்கள் நேற்றைய தினம் பார்த்து ரசித்துள்ளனர்.
சென்னையில் மழை எப்போது நிற்கும்? வானிலை மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு
பெங்களூரு மக்கள் சொல்வது என்ன?
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதிலிருந்து தப்பிக்கும் வகையில் நேற்று ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கிவிட்டது. குறிப்பாக CBD எனப்படும் மத்திய வர்த்தக மாவட்டத்தின் பகுதிகளில் தான் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது. ஒருபுறம் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது என்றனர்.
பனி படர்ந்த கண்டீரவா ஸ்டேடியம்
பெங்களூரு நகரின் பிரதான பிரச்சினையாக இருப்பது மழைநீர் தேக்கம் தான். அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. முக்கிய சாலைகள், வர்த்தகப் பகுதிகளில் 2 முதல் 3 அடி வரை மழைநீர் தேங்கியது. மறுபுறம் ஆலங்கட்டி மழையால் கண்டீரவா ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனி படர்ந்திருப்பதை போன்று காட்சி அளித்தது என்றனர். மாலையில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்களும், மரக் கிளைகளும் முறிந்து விழுந்தன.
எம்.ஜி.ரோடு முதல் பெல்லந்தூர் வரை கனமழை
| பெங்களூரு மழைப்பொழிவு நிலவரம் | 78 மி.மீ |
| ஏப்ரல் 29ல் கனமழை வெளுத்து வாங்கிய இடங்கள் | எம்.ஜி.ரோடு, அசோக் நகர், ரிச்மண்ட் டவுன், அல்சூர், இந்திரா நகர், கோரமங்கலா, சிக்பேட், சாம்ராஜ்பேட், விவி புரம், பனசங்கரி, ஜே.பி.நகர், பிடிஎம் லேஅவுட், பெல்லந்தூர் |
பெஸ்காம் நிறுவனத்திற்கு பறந்த அவசர அழைப்புகள்
இந்த மழையால் BESCOM எனப்படும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்திற்கு அவசர அழைப்புகள் சென்ற வண்ணம் இருந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1912 என்ற எண்ணிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்துள்ளனர். அதில், மின்சார துண்டிப்பு, மரங்கள் முறிந்து விழுந்தன, மின் கம்பங்கள் சாய்ந்தன, கேபிள் துண்டிப்பு, டிரான்ஸ்பர் வெடிப்பு போன்ற புகார்கள் சென்றுள்ளனர்.
இதை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகளும், ஊழியர்களும் தீவிரம் காட்டினர். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை BESCOM-க்கு 25 ஆயிரம் அழைப்புகள் சென்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக சரிசெய்வதற்கான முயற்சியில் அடுத்தடுத்து கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 30 IMD வானிலை நிலவரம்
- துமகுரு, குடகு, மைசூரு, சிக்கமகளூர், சித்ரதுர்கா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பிருக்கிறது.
- துமகுரு, மாண்டியா, சித்ரதுர்கா, சிக்கபல்லபுரா, ராமநகரா, பெங்களூரு ரூரல், பெங்களூரு அர்பன் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் பரவலான மழை பெய்யக்குடும். இங்கேயும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசலாம்.
- பல்லாரி, சாம்ராஜ்நகரா, தாவனகெரே, கோலார், சிவமோகா, விஜயநகரா மாவட்டங்களில் லேசானது முதல் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்.

More Stories
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
தேர்தல் முடிந்ததும் விசிகவில் அதிரடி மாற்றம்.. திருமாவளவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முதலைமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு எவ்வளவு.. எங்கு அதிகம்?