சென்னை: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு அதிக லைக்குகளை அள்ள வேண்டும்; நண்பர்கள் மத்தியில் ஹீரோவாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில், பொது சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இன்ஸ்டாவில் பதிவிடுவதற்காக சாகசம்: சென்னையில் அண்ணாசாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாலைகளில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வது, முன்சக்கரத்தைத் தூக்கியபடி வாகனம் ஓட்டுவது, வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்வது, ஆபத்தான முறையில் வளைத்து, நெளிந்து ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதிக பார்வைகள், லைக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஆபத்தின் எல்லைக்கே சென்று சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், சாகசம் செய்யும்போது சிறிது கவனம் சிதறினாலும் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அப்பாவிகளும் இதனால் பாதிக்கப்படலாம். சில நொடிகள் கிடைக்கும் புகழுக்காக உயிரையே பணயம் வைக்கும் இந்த செயல்கள் விபரீதத்தில் முடியும் ஆபத்து உள்ளது.
855 நவீன கேமராக்கள் கண்காணிப்பு: பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள், சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை மறந்து விடுகின்றனர். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், 119 இடங்களில் 855 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஐடிஎம்எஸ் எனப்படும் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் செயல்படும் நவீன கேமராக்கள், போக்குவரத்தை கண்காணிப்பதுடன், சிவப்பு சிக்னலை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்பட அனைத்து வகையான விதிமீறல்களையும் கண்டறிய உதவுகின்றன.
ஏஎன்பிஆர் எனப்படும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலமும் விதி மீறல் வாகன ஓட்டிகள் அடையாளம் காணப்படுகின்றனர். சில கேமராக்கள் தானியங்கி முறையில் விதிமீறல்களைப் பதிவு செய்து அபராத நடவடிக்கைக்கு உதவுகின்றன.
மற்ற கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போக்குவரத்து போலீஸார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஆய்வு செய்து, விதிமீறல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கின்றனர். இதுதவிர, சாலைகளில் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸாரும் விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர்.
73 பேர் கைது: பைக் ரேஸ் தொடர்பாக கடந்த ஜன.1-ம் தேதி முதல் அக். 7-ம் தேதி வரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் இளைஞர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாகவும் போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் எதிர்திசையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், ஒரே பைக்கில் 3 பேர் பயணம் செய்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம்: இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி கூறுகையில் “சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வழிகாட்டுதல்படி போக்குவரத்து போலீஸார் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இளைஞர்கள் விளையாட்டாக பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட வேண்டாம். கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் பதிவு செய்யப்படுவதுடன், போலீஸாரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கினால், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வாகனங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் லைக்குகளையும் பார்வைகளையும் பெறுவதற்காக மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். பைக் ரேஸில் ஈடுபட்டு எதிர்காலத்தைத் தொலைக்காதீர்கள். உங்கள் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் மதிப்பளியுங்கள். பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் வேதனையை ஏற்படுத்த வேண்டாம்” என்றனர்.

More Stories
“திறந்து வைப்பது அல்ல; எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே உண்மையான பெருமை” – மு.க.ஸ்டாலின்
“கவர்ச்சி அரசியல் செய்யும் நீர்க்குமிழி அல்ல; அதிமுக மாபெரும் மக்கள் பேரியக்கம்” – பழனிசாமி பெருமிதம்
ஆளுநர் அர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு: முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து