அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வரக்கூடாது என எஸ்ஜிபிசி உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம், ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சீக்கிய மத குருமார்கள் ‘குரு துரோகி’ என்று அறிவித்தனர். சீக்கியர்களின் உச்சக்கட்ட மத அமைப்பான அகால் தக்த், அந்த வீடியோவின் அடிப்படையில் பகவந்த் மானை ‘குரு துரோகி’ மற்றும் ‘கல்சா பந்த் விரோதி’ என்று அறிவித்தது.
இருப்பினும், அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அதில் உள்ளவர் தன்னைப் போன்ற முகமூடியை அணிந்திருந்தார் என்றும் மான் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசின் இலவச ‘முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டத்தின்’ கீழ் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்த பக்தர்கள், முதல்வர் பகவந்த் மான் புகைப்படம் கொண்ட அடையாள அட்டைகளை அணிந்திருந்தனர்.
இதையடுத்து, அந்த அடையாள அட்டையை அகற்றுமாறு ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) அதிரடிப்படையினர் கேட்டுக் கொண்டனர். குருத்வாராவுக்குள் எந்தவித விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
‘முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்’ என்பது 50 வயதுக்கு மேற்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்மிகத் தலங்களுக்கு இலவசமாகச் சென்று வர அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

More Stories
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி; பதக்கங்களை குவித்த இந்திய குழுவிற்கு பிரதமர் வாழ்த்து…
ஆந்திராவில் கர்ப்பிணியை தூளியில் வைத்து 8 கி.மீ. சுமந்து சென்ற உறவினர்கள்
விவசாயிகள் தேசிய தென்னை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு!