May 27, 2026

மீண்டும் கட்சி தாவிய டாக்டர் பா.சரவணன் – உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து தவெகவில் ஐக்கியம்

மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் பா. சரவணன், மீண்டும் கட்சி தாவி தவெக-வில் இணைந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து மதுரை மாநகர் அதிமுக பொருளாளர் குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பார்த்திபன், இணைச் செயலாளர் மாரநாடு, பகுதி செயலாளர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

இவர்கள் 4 பேரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நெருக்கமானவர்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று டாக்டர் பா. சரவணன் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவர், ஏற்கெனவே மதிமுக, திமுக, பாஜகவில் இருந்தவர். ஒவ்வொரு கட்சியிலும், அதன் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள், தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் மற்ற கட்சிகளுக்கு தாவி வந்தார்.

கடைசியாக பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு 3-ம் இடம் பிடித்தார். மேலும், தற்போது முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளூர் மாநகர் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி பா. சரவணனுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி வாய்ப்பு வழங்கினார். ஆனாலும், இந்த தேர்தலிலும் சரவணன் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டாக்டர் பா. சரவணன் 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று 2 ஆண்டுகள் மட்டும் எம்எல்ஏவாக இருந்தார். அடுத்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து மறுநாளே சீட் பெற்றார். அப்போது அதிமுக கூட்டணியில் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மோதல் ஏற்பட்டதால் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூலம் மீண்டும் திமுகவில் சேர முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலம் அதிமுகவில் இணைந்தார்.

தற்போது அங்கும் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தவெகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் பா.சரவணன், பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்ததால் அதிமுகவில் அவர் இணைந்தபோது திமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் அவரை ‘சர்வ கட்சி சரவணன்’ என்று விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘அதிமுகவில் கொள்கைப் பிடிப்பில்லாத, லாப நோக்குடன் இருந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராக வெளியேறுகிறார்கள். அந்த வரிசையில் டாக்டர் பா.சரவணனும் சென்றுள்ளார்.

அவர் மக்களவைத் தேர்தல் தோல்வியின்போதே ஓரிரு நாட்களிலேயே வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்த்தோம். சற்று தாமதமாக தவெகவுக்கு சென்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அவர் மேயர் பதவியை எதிர்பார்த்து செல்வதாக கூறுகிறார்கள்.

அங்கும் ‘சீட்’ கிடைக்காவிட்டால் வெளியேறுவார். உள்ளாட்சித் தேர்தல் சட்டப்பேரவை தேர்தலை போல அல்ல. அதில் அவரவர் சொந்த செல்வாக்கை கொண்டே வெற்றி பெறுவர். அதனால் தவெகவுக்கு செல்வோர் உள்ளாட்சித் தேர்தலில் வெல்லப் போவதில்லை’’ என்றனர்.

Spread the love