சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்வுக்கு பிறகு அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் விதமாகவும், 58 வயதை எட்டிய நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், அதற்கான நிலுவைத் தொகையாக ரூ.14.13 லட்சத்துக்கான காசோலைகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வழங்கினார்.
இத்திட்டத்தின்கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள், 13 குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஓய்வூதிய ஆணைகளுடன் சேர்த்து, 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி,மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், பொது மேலாளர் ல.சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” – டிகே.சிவகுமார் வேண்டுகோள்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் – குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உத்தரவு