November 17, 2026

ராஜீவ், சோனியா சென்ற அதே உணவகத்தில் காதலியுடன் ராகுல் – நூல் வெளியீட்டு நிகழ்வில் வெளியான ரகசியம்

புதுடெல்லி: ராஜீவ் காந்தி-சோனியா காந்தி சென்ற அதே உணவகத்திற்கு தன் காதலியுடன் சென்றுள்ளார் ராகுல் காந்தி. இந்த ரகசியத்தை அவர் தன் தாயின் நூல் வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நேற்று தனது தாயார் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது அவர், தனது வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத ராகுல், தனது முன்னாள் காதலி குறித்தும் குறிப்பிட்டார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தனது காதலியை, தனது பெற்றோர்கள் முதன்முதலில் சந்தித்த அதே உணவகத்துக்கு அழைத்துச் சென்றதாக ராகுல் தெரிவித்தார்.

தற்போது அவர்களுடனான உறவு குறித்த கேள்வி எழுந்தபோது, அவர்கள் இப்போது காதலில் இல்லை எனவும், நண்பர்களாகவே இருப்பதாகவும் ராகுல் சாமர்த்தியமாகப் பதிலளித்தார். அந்த உணவகத்தின் மஞ்சள் நிறக் கதவையும், நுழைவாயிலில் ஒரு நபருடன் தான் நடத்திய உரையாடலையும் ராகுல் நினைவு கூர்ந்தார்.

அந்த உணவகத்துடன் தனது பெற்றோருக்கும் இருந்த தொடர்பைப் பற்றி ராகுல் கூறுகையில், ‘நாங்கள் உள்ளே சென்றோம். அந்த மஞ்சள் நிறக் கதவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. அங்கே ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அவர், ‘எத்தனை பேர்?’ என்று கேட்டார்.

நான், ‘இருவர்’ என்றேன். அதற்கு அவர், ‘போய் அமருங்கள்’ என்று கூறினார்,” என்று விவரித்தார். இருக்கையில் அமர்ந்த பிறகு, தனது பெற்றோர்கள் இந்த இடத்தில்தான் சந்தித்துக்கொண்டனர் என்று உணவக ஊழியரிடம் ராகுல் கூறினார். அதற்கு அவர்கள் அளித்த பதில் அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் அவர்களிடம், ‘என் பெற்றோர்கள் இந்த உணவகத்தில்தான் சந்தித்துக்கொண்டார்கள்’ என்று சொன்னேன். அவர் என்னைப் பார்த்து, ‘ஓ, அந்த இருவரா? எனக்கு அவர்களைத் தெரியும்’ என்றார்.

நான், ‘அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஓ, அந்த இருவரா! நீங்கள் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று பதிலளித்தார்’ எனத் தெரிவித்தார்.

உணவகத்தில் தாம் சாப்பிட்ட ‘சிக்கன் சேஸர்’ உணவு குறித்து ராகுல் விவரித்தார். இருப்பினும், தனது பெற்றோர்கள் இந்த உணவகத்தைப் பற்றி வைத்திருந்த காதல் நினைவுகளுடன் ஒப்பிடுகையில், அங்கு பரிமாறப்பட்ட உணவு அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை என்றார்.

எனவே, ‘அந்த உணவை யாரும் ஆர்டர் செய்ய வேண்டாம்’ என்று நகைச்சுவையாக ராகுல் அறிவுறுத்தினார். நகைச்சுவையான தொனியில் தொடர்ந்த ராகுல், ’நீங்கள் காதலில் விழவேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக வர்சிட்டி உணவகத்துக்கு செல்லுங்கள். ஆனால், அங்கே சிக்கன் சேஸரை மட்டும் ஒருபோதும் சாப்பிடாதீர்கள், சரியா?’ எனக் குறிப்பிட்டு சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

Spread the love