புதுடெல்லி: மத்திய அரசு, எல்ஐசி நிறுவனத்தில் மேற்கொண்டுள்ள ரூ.31,500 கோடி மதிப்பிலான, ‘ஆஃபர் ஃபார்சேல்’ (OFS) எனப்படும் இரண்டாம் நிலை பங்கு விற்பனையை அதீத ரகசியம், வேகம் மற்றும் துல்லியமான திட்டமிடலுடன் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஓஎப்எஸ் பங்கு விற்பனையாகும்.
இந்த பங்கு விற்பனை கடுமையான ரகசியத்துடன் நடத்தப்பட்டுள்ளது. சந்தையில் பங்குகளின் விலை சரிவதைத் தவிர்க்க, இந்தத் திட்டம் குறித்து அரசுத் தரப்பில் எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த மாபெரும் பரிவர்த்தனைக்காக நியமிக்கப்பட்ட ஐஐஎஃப்எல் கேபிடல், பிஎன்பி பரிபாஸ், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோதிலால் ஓஸ்வால் ஆகிய 4 முன்னணி முதலீட்டு வங்கிகளும்கூட, பங்கு விற்பனை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை இதன் விவரங்களை அறியவில்லை.
அதில் ஒரு வங்கியாளர் எந்தக் காரணமும் கூறப்படாமல் டெல்லியில் உள்ள அரசு அலுவலகத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்டு, அங்கு சென்ற பின்னர்தான் அன்று இரவே பங்கு விற்பனை தொடங்கவுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு ஆலோசனை வழங்கிய இந்த 4 வங்கிகளுமே எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாகச் செயல்பட்டன.
ஆரம்பத்தில் 2.5 சதவீத பங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்த விற்பனைக்கு, நிறுவன முதலீட்டாளர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கூடுதல் பங்குகள் சேர்த்து மொத்தம் 6.5% பங்குகள் விற்கப்பட்டன.
10% ஆக உயர்வு
இந்த வெற்றிகரமான பங்கு விற்பனை மூலம் மொத்தம் ரூ.31,552 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர் பங்கு விகிதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் செபி நிர்ணயித்த 2027 மே மாத காலக் கெடுவுக்குள் தங்களது விதிமுறைகளை இந்நிறுவனம் முன்கூட்டியே முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது.

More Stories
போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை
தங்கம் பவுனுக்கு ரூ.2,160 உயர்வு: தொடர்ந்து 2-வது நாளாக விலை அதிகரிப்பு
மின்சார வாகனங்களுக்காக 5 ஆண்டுகளில் 20,000 சார்ஜிங் நிலையங்கள்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு