May 22, 2026

வன்னியரசுக்கு சமூக நீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

ஷாஜஹான் (இடது), வன்னியரசு (வலது)

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும்.

ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரானார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.

முன்னதாக, இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். 

இந்நிலையில் அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல் கட்சியும் இடம்பெற வேண்டும் என்று தவெக அழைப்புவிடுத்தது. அதைப் பரிசீலித்த இரண்டு கட்சிகளும் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க, வன்னியரசும், ஷாஜஹானும் அமைச்சர்களாகி இருக்கின்றனர்.

முன்னதாக நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு, ‘ என்னை நம்பி இந்த பெரிய பொறுப்பை வழங்கிய திருமாவளவனுக்கு நன்றி. சாதி ஒழிப்பும், தமிழ்த் தேசியமும் விசிகவின் கொள்கை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் திருமாவளவன். அவர் சொன்னது இப்போது நிறைவேறுகிறது. ஆட்சியில் பங்கு என்பது, ஜனநாயகத்தை, அதிகாரப் பகிர்வை விரும்புகிற அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

தவெக அமைச்சரவையில் இணையுமாறு அழைத்தார்கள், நாங்கள் இணைந்துள்ளோம். எல்லா பூட்டுகளுக்கும் சாவி அதிகாரம் தான் என அம்பேத்கர் சொல்லியுள்ளார். இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம். தமிழகத்தில் விசிக தான் மையம் என்பதை எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார். அமைச்சர் பதவியில் மக்கள் பாராட்டும்படி, நேர்மையான வகையில் செயல்படுவோம்” எனத் தெரிவித்தது இங்கே மேற்கோள்காட்டத் தக்கது.

Spread the love