சென்னை: தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “இருசக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களது புதிய வாகனத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழகத்தை, முதன்மை விருப்பமாகக் கருதுகின்றன.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில், தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்திப் பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றன.
மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட் (Madras International Circuit) சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையிலும், KARI Motor Speed Way கோயம்புத்தூரிலும், மோட்டார் பந்தயத்திற்கான முக்கியக் கட்டமைப்புகளாக உள்ளன. இந்தப் பந்தய அரங்குகளில், தேசிய அளவில் F-3, F-4 கார் பந்தயப் போட்டிகள் நடைபெறுகிறது. தற்போது மோட்டார் வாகனப் பந்தயத்திலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழகம் வலுவான ஆட்டோமொபைல் உற்பத்திக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உலக அளவிலான மோட்டார் வாகன கார் பந்தய விளையாட்டுப் போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும், அதற்குத் தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்கத் தேவையான சூழல் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்துவரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழகத்தை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழகத்தில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும்.
இந்த நகரத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம் மற்றும் அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமையும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
ரூ.1200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
“தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக” – டிடிவி தினகரன்
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய்