சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கணக்கெடுப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் 3 ஆயிரம் வீடுகள் வரை வருவதால் கணக்கெடுப்பாளர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள், அதில் உள்ள வசதிகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் கடந்த ஆக.1 முதல் தொடங்கியுள்ளது.
அடுத்தகட்டமாக, 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. தற்போது வீடுகள் கணக்கெடுப்பில், வீடு, அந்த வீட்டின் தரை, சுவர், மேற்கூரை எந்த பொருளால் ஆனது, வீட்டில் உள்ள அறைகள், கழிப்பறை, குடிநீர் ஆதாரம், கழிவுநீர் வெளியேற்றம், வாகன வசதி, தொலைபேசி, தொலைக்காட்சி இணைப்பு, இணையதள வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் பெறப்படுகின்றன.
இப்பணியில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர், ஒருவருக்கு 200 முதல் 300 சென்சஸ் வீடுகள் என்ற அளவில் பிரிக்கப்படுகி்றது.
ஆனால், தற்போது கூகுள் மேப் மூலம் குறிப்பிட்ட பகுதி மேப்பிங் செய்யப்பட்டு அதில் உள்ள வீடுகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒருகணக்கெடுப்பாளருக்கு 1000 முதல் 3000 வீடுகள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தாம்பரத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஒரு பிளாக்கில் 96 வீடுகள் உள்ளன. அப்படியானால், 3 பிளாக் என்ற அளவி்ல்தான் ஒரு கணக்கெடுப்பாளருக் குரிய களம் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், கூகுள் மேப் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட பிளாக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரு கணக்கெடுப்பாளருக்கு 3,000 வீடுகள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு இந்த விவரம் தெரிந்திருந்தும், கூடுதல் நபர்களை நியமிக்காமல், இருப்பவர்களைக் கொண்டே பணிகளை ஒதுக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், பணி ஒதுக்கீடு பெற்றவர்களும் இதுவரை அதற்கான உத்தரவுகளை பெறாமல் காத்திருப்பதால், சென்சஸ் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதற்கிடையே, தாம்பரம் தாலுகாவில் கணக்கெடுப்பு பணிக்கான அலுவலர்கள் மிகவும் குறைவாக இருப்பதால், கிராம உதவியாளர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர்.
இப்பணி செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் நிலையில், தங்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் இப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழகம், புதுச்சேரிக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்ககம் மற்றும் குடிமக்கள் பதிவு இயக்குநர் எம்.சுந்தரேஷ்பாபு கூறியதாவது: மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 10 நாட்களில் நல்ல நிலையில் இருக்கிறது.
முதல் 10 நாட்கள் தயாரிப்பு பணிகள் நடைபெறும். தற்போது, பெரும்பாலான மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணி தொடங்கிவிட்டன. மக்கள்தொகை அல்லது வீடுகள் அடிப்படையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம். மக்கள்தொகை அடிப்படையில் என்றால், ஒரு நபர் 800 முதல் 900 மக்களையும், வீடுகள் அடிப்படையில் என்றால் ஒரு நபர் 200 முதல் 300 வீடுகளையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஒருநபர் இத்தனை வீடுகளில் கணக்கெடுக்க வேண்டும் என்று கடுமையான உத்தரவோ, நிபந்தனைகளோ எதுவும் இல்லை. வீடுகள் அதிகம் இருந்தால் பிரித்துக் கொள்ளலாம். பொறுப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தால் அவர்கள் பிரித்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தாலும் பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஆக.25-ம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடிந்துவிடும். அதன்பிறகு, விடுபட்டவை, திருத்தப் பணிகள் நடைபெறும். அடுத்த 10 நாட்களில் 70 முதல் 80 சதவீத பணிகளை முடித்து விடுவோம். கணக்கெடுப்பாளர்கள் கோரும் விவரங்களை பொதுமக்கள் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? – திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை
செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பே காரணம்: ஐநா அறிவிப்பு