புதுடெல்லி: திருமண வரவேற்பு மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி.யும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவின் மகள் ரேவதி சுலே-நாக்பூர் தொழிலதிபர் சாரங் லகானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கட்சி வேறுபாடின்றி அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது திருமண மேடையில் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் பிரதமர் மோடி உற்சாகமாக பேசினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சூடான விவாதத்தில் ஈடுபடும் நிலையில், அவைக்கு வெளியே திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பேசுவது அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
திருமண வரவேற்பின்போது மேடையில் நின்றிருந்த பிரியங்கா காந்தியைப் பார்த்த பிரதமர் மோடி, “பிரியங்கா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றார். அதற்கு பிரியங்கா, “நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு பிரதமர் மோடி, “நான் அப்படியேதான் இருக்கிறேன்” என்றார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே், “நீங்கள் அப்படியே இல்லை. சிறிது மாறி இருக்கிறீர்கள்” என்றார். அதற்கு அப்படியா.. என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார் பிரதமர் மோடி.
பின்னர் கார்கேவின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு கையொலி எழுப்பி உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியும் சிரித்தவாறே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

More Stories
5 மாநில தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207 கோடி நன்கொடை
மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு சான்று: ஆந்திர அரசுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு
தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை 3 நட்சத்திர ஓட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை