சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், நேற்று தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்ற தொலைநோக்கு செயல்திட்டங்களை முதல்வர் வகுத்து வருகிறார்.
அந்தவகையில் உங்கள் தேவைகள் அனைத்தையும் செய்துதர நான் தயாராக உள்ளேன். விளையாட்டு பயிற்சி நேரங்கள் முடிந்து சிறிதுநேர ஓய்வுக்கு பின் உடனடியாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவுசெய்தால்தான், விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயர் அலுவலர்கள் நிலையிலான பணியை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்த இலக்கை அடைந்திடும் வகையில் எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி,
விளையாட்டுத் துறை உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டுத் துறை தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமுமின்றி எளிதாக என்னை அணுகி தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
“தமிழக அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாட வேண்டும்” – வைகோ
தமிழக அமைச்சர்களாக காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 23 பேர் பதவியேற்பு