சென்னை: ”அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசுப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்” என்று அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்: “இன்று சிலர், ‘அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல. என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக் கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில் தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசுப் பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும் ?
ஓர் அரசுப் பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி…: இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள் ? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசுப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.” என்று அமைச்சர் கீர்த்தனா கூறியுளார். இத்துடன் தனது பள்ளிப் பருவ புகைப் படத்தையும் இணைத்திருந்தார்.
முன்னதாக, அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால் ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More Stories
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை