July 29, 2026

ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு பர்வதமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் தளர்த்த கோரிக்கை

கலசப்பாக்கம் : சித்தர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இன்றும் காட்சி தரும் நந்தி வடிவமான பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் பர்வத மலையில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு எனக்காரணம் காட்டி கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் காலை 5 மணி மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தரிசனத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் தரிசன செய்யும் வரும் பக்தர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் சாமி தரிசனம் செய்ய முடியாமல் செல்கின்றனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பர்வத மலைக்கு வந்த சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் பர்வத மலை அடிவாரத்தில் உள்ள ஓடையை கடக்கும்போது வெள்ளத்தில் அடித்து சென்றனர்.

பக்தர்களின் பாதுகாப்புக் கருதி உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கேற்ப முதற்கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால் உயர்மட்ட பாலம் கட்ட முடியவில்லை. எதிர்காலத்தில் விலைமதிப்பில்லா உயிர்களை பாதுகாத்திட ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டிட வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் பச்சையம்மன் கோயில் முதல் மலை அடிவாரம் வரை சாலை அகலப்படுத்த வேண்டும்.

இப்பணிகளை தொடர்ந்திட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரசித்திபெற்ற கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நாளை ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கூடுதலாக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Spread the love