சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை காரணமாக பொதுமக்கள் அவதி அடைகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திடிரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், மறுநாள் வேலைக்கு செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் 2 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் 4 மணி நேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இரவு நேரங்களில் வீடுகளில் அதிகமான ஏசி பயன்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு பணி போன்ற காரணங்களால் மின் தேவை அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, மின் மாற்றிகள் மற்றும் வளைய சுற்று அமைப்புகளில் உள்ள டிரிப்பர் செயல்பட்டு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் கிடைத்தவுடன் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது ” என கூறினர்.

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி